என்னுள் இப்போதே கலந்து போ..!

உன் கூந்தலை வருடிய
காற்றிடம் சொன்னேன்..
பின் ஜென்மத்தில் என்
கைகளாய் பிறந்து போ..!

நீ தனிமையில் கேட்ட
பாட்டிடம் சொன்னேன்..
பின் ஜென்மத்தில் என்
குரலாய் பிறந்து போ..!

உன்னைக் கண்டு களித்த
முகக் கண்ணாடியிடம் சொன்னேன்..
பின் ஜென்மத்தில் என்
கண்களாய் பிறந்து போ..!

உன்னுள் வாழும்
உயிரிடம் சொன்னேன்..
தாமதம் வேண்டாம் –
என்னுள் இப்போதே
கலந்து போ..!

Advertisements

விதியே நான் தான் இங்கே…!!!

முடித்தவுடன் மறக்கும் கல்வி;

வருடங்களுடன் வரும் புது நட்புகள்;

தொலைப்பேசி காட்டும் தாய் தந்தை முகம்;

உலகமயமாக்களில் தொலைந்து போன உறவினர்கள்..

 

போதிய வருமானம் –

போதாத நேரம்..!

 

பொய்யுரைக்கும் பெருமைச் சிரிப்பு;

மெய்யுரைக்கும் ஊமை அழுகை..!

 

விடியலுடன் எழுந்து –

இரவுடன் தூங்கி..

கடிகாரங்களின் நடுவே

நிமிடங்களைத் தொலைத்து..

நாட்காட்டிகளின் நடுவே

வயதினைத் தொலைத்து..

 

விடியற் பொழுதில் நட்சத்திரங்களையும்

இரவுகளில் வெளிச்சத்தையும்

தேடாமல் தேடித் திரியும்

அற்பன் நான்..!!

 

விதிவிலக்கல்ல –

விதியே நான் தான் இங்கே…!!!


நினைவுகள்

வீட்டுக்கு டீவிப் பெட்டிலா வரதுக்கு முன்னாடி.. வார நேரம்னா அகில இந்திய வானொலி நிலையம்.. வார விடுமுறைனா கொஞ்சம் போநஸ். பாட்டு கேசட்டு, பட வசன (சிவாஜி வசனங்கள்) கேசட்டு, கரிசல் குயில் பாடல் கேசட்டு.. அப்புறம் எல்லாரோட பேவரைட் லியோனி பட்டிமன்றம்.. கண்ணதாசானா பட்டுக்கோட்டையா, பழைய பாடல்களா புதிய பாடல்களா, மகனா மகளா, தாயா தாரமா… இப்படி திரும்ப திரும்ப கேட்க வைக்கும் அற்புதமான பட்டிமன்றங்கள். வசனங்கள் முதற்கொண்டு எல்லாருக்கும் அத்துப்பிடி. இருந்தாலும் திரும்ப திரும்ப கேட்டோம் (எங்க அப்பா கேட்க வச்சாரு).
இந்த பட்டிமன்றங்களில் நடுவர் தீண்டுக்கல் ஐ. லியோனிய தவிர்த்து, முக்கிய பேச்சாளர்கள் கவிஞர் வெண்மணி, கவிஞர் முல்லை நடவரசு, கவிஞர் மு.ரா., மற்றும் சுப. மாரிமுத்து. எல்லாரும் விரும்பி கேட்டது.. கவிஞர் மு.ரா.

நினவுகளில், கண்ணதாசானா பட்டுக்கோட்டையா பட்டிமன்றத்தில் இருந்து மு.ரா. சொல்லிய ஒரு சிறு கதை இதோ..!

(பட்டிமன்றத்தில் இருந்து)

அவரை போட்டா துவரை முளைக்கும்

துவரை போட்டா அவரை முளைக்கும்
அப்படி ஒரு தேசத்துல ஒரு ராஜகுமாரி
தூர் இல்லாத குடத்த எடுத்துக்கிட்டு
கரையே இல்லாத தன்ணிக்கு போனாளாம்..

அங்க தலையே இல்லாத மானு
வேரே இல்லாத அருகம் புல்ல மேயுரத
கண்ணே இல்லாத குருடன் பாத்துப்புட்டு
காலே இல்லாத முடவன் கிட்ட சொல்ல
அவன் துப்பாக்கிய எடுத்து சுட்டான்

குண்டு மான் மேல படாம
மான் வயித்துல இருந்த குட்டி மேல பட்டு
குட்டி செத்து போச்சு

அந்த குட்டிய எடுத்து அறுத்து கலக்கி
சமைச்சு சாப்புட்டு புட்டு
தோல காலில்லாத பந்தல்ல காயப் போட்டாங்கே..

அதை தலையே இல்லாத பருந்து அடிச்சிக்கிட்டு போக..
அதை காலே இல்லாத முடவன் விரட்டிக்கிட்டு போக..

அவன் கால்ல குத்துன கண்டங் கத்திரி முள்ளு
தலைக்கு மேல வெளிய வர..
அவன் வைத்தியம் பாக்க வைத்தியர் கிட்ட போனான்..

அவரு சொன்னாரு..

ஆல வேரு அரச வேரு புங்க வேரு புரச வேரு..
இந்த நாலு வேரையும் கை படமா புடுங்கி..
உரல் படாம அரைச்சு..
நாக்கு படமா நக்குடா..

இது முத நாள் பத்தியம்ன்னாரு..

கண்டங் கத்திரி வேர கை படாம புடுங்கி..
உரல குப்புறக்கா போட்டு
உலக்கை படாம இடிச்சி
புரங்கையாள நக்குடா அய்யா…

இது ரெண்டா நாள் பத்தியம்ன்னாரு..

இப்படிப் பட்ட சிறப்பான வைத்தியம் பாத்த வைத்தியருக்கு
ஏதாச்சும் சன்மானம் குடுக்கணும்னு சொல்லி..

அடியே இல்லாத படிய எடுத்து
ஓட்டை சாக்குல ஒம்போது மூட உழுந்து அளந்து

சக்கரமே இல்லாத வண்டில பாரம் ஏத்தி
நொண்டி வண்டி ஒட்ட
குருடன் வழி காட்ட..
வண்டி பாட்டு பொய்க்கிட்டே இருந்துச்சாம்…!


பயணம்

அமைதியாய்..
ஆனந்தமாய்..
இதமாய்..
இருந்த இரவினில்..
ரயிலுக்காக காத்திருந்தேன்

காத்திருப்போருக்கே உரித்த இடமாம்
ரயில் நிலையத்தில்..

அப்பொழுது..
திடீரென ஒரு உணர்ச்சி..!
மழைத் துளியின் முதல் துளி
மண்ணில் பட்ட உணர்ச்சி..!
மெல்லிய தென்றல் செவிகளில்
உரசிச் சென்ற உணர்ச்சி..!

அங்கே –
அவள் வந்தாள்..!

எங்கோ கண்டவளைப்
போன்றவள் என
பொய்யுரைக்கத் தயாறில்லை நான்;
எங்கும் கண்டதில்லை
அவளைப் போல் நான்!

கருப்பு நிற உடையினில் வந்து
கண்களில் நிறைந்தாள்!
கருப்பின் தனித்துவம்
அன்று தான் விளங்கியது எனக்கு
ஆம் –
ஒளியினை உள்ளீர்க்கும் சக்தியுண்டு அதற்கு
அதனால் தான் என்னவோ..
அவளைச் சுற்றியே
அனைவரின் கண்ணொளியும்!

குழந்தையொன்று –
அவளைப் பார்த்ததும்;
புன்கைத்தது!

மழலையல்லவோ..
என்னைப் போல் உணர்வுகளை
மறைக்கத் தெரியவில்லை அதற்கு!

அவள் உடனே –
அக்குழந்தையினை கையில் தூக்கி
முகத்திற்கு முகம் நெருக்கி
கொஞ்சத் தொடங்கினாள்

முழு நிலவினை உள்ளங்கையில்
பார்த்த மகிழ்ச்சி அக்குழந்தைக்கு!

நெற்றியில் தன் பிஞ்சு விரல்களை வைத்து
இமைகளின் இடையே கொண்டு வந்து
மெல்லிய மூக்கினை மெதுவாய் வருடியபடி..

சிரித்துக்கொண்டே செவ்விதழ்களில்
கைவைத்த பொழுது..
முத்தமிட்டாள் அவள்!
அக்குழந்தியின் பிஞ்சு விரல்களில்..!!

ஆயிரமாயிரம் பக்கங்களில் எழுதிய
தமிழினைப் படித்த இன்பம் அது!

அவள் பேசும் வார்த்தைகள் கூட
புரியாத போதும்..
அவளையே புரிந்து கொண்டதாய்
உணர்வு அக்குழந்தைக்கு..

அவள் செவிகளில் ஆணவமாய் ஆடிக்கொண்டிருந்த
அவள் தோடுகளை மேதுவாய் ஆட்டி
விளையாடிக் கொண்டிருந்த வேளையில்..

அவள் காத்திருந்த ரயில்
அவளைக் காண ஓடோடி வந்தது!
கடைசியாக ஒரு முத்தம்..
அக்குழந்தையின் கன்னங்களில்!

விடை பெற நினைத்தவள்.. என்னுள்
பல கேள்விகளை நிரப்பி விட்டுச் சென்றாள்!

கைகளில் சிக்கி மகிழ்ந்தது மழலை
கண்களில் சிக்கி மகிழ்ந்தேன் நான்!

ரயிலில் பயணம் செய்ய வந்தவள்
என் வாழ்க்கைப் பாதையிலும்
சிறிதாய் பயணித்து விட்டுச் சென்றாள்!

அவள் அழகை என்னுள்ளே
விட்டுச் சென்றாள்..!

[2005-ல் மதுரை ரயில் நிலையத்தில் எழுதியது]